×

இந்த வார விசேஷங்கள்

பாபவிமோசனி ஏகாதசி

16.4.2023 ஞாயிறு

வசந்த காலமான சித்திரை மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி இது. பாபவிமோசனி ஏகாதசி என்று பெயர். ராகுவின் சதய நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. ஏகாதசி விரதம் மூன்று தினங்கள் உள்ளடக்கியது. தசமியில் தொடங்க வேண்டும். ஏகாதசியில் முழு உபவாசம் இருக்க வேண்டும். அதிதி பூஜை செய்து பாரணையை நிறைவுசெய்ய வேண்டும். வட நாட்டிலே ஏகாதசி விரதத்தை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் கோதுமை ரொட்டிகளை காய்கறிகளோடு பிரசாதமாக எடுத்துக் கொள் கிறார்கள். நாம் நம் மரபுப்படி அரிசி சோறு காய்கறிகளுடன் படைக்கிறோம்.

இதில் உணவை விட மனநிலை தான் முக்கியம். உபவாசம் என்றாலே பட்டினி கிடப்பது என்பது மட்டும் பொருள் அல்ல. அன்று மற்ற உலகியல் காரியங்கள் ஒரு புறம் செய்து கொண்டிருந்தாலும் கூட முழுமையாக இறைவனிடத்திலே நம்முடைய மனதைச் சமர்ப்பிக்கிறோம். அவருக்கு அருகாமையிலே வாசம் செய்கிறோம் என்று அர்த்தம். பெரியாழ்வார் பட்டினிநாள் என்பதற்கு புதிய விளக்கம் தம் பாசுரத்தில் அருளிச்செய்கிறார். இறைவனை நினைக்காத நாள் பட்டினி நாள். இறைவனை நினைத்து பூஜை செய்த நாள் சாப்பிட்ட நாள் என்பது அவர் வாக்கு. அந்தப் பாசுரம் இது.

கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
வேத நாள்மலர் கொண்டு உன் பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே.

இதை மனதில் கொண்டு தசமியில், மதியம் ஒரு பொழுது உண்டு, விரதம் இருந்து, அடுத்த நாள் ஏகாதசி முழுவதும் பகவான் நாராயணனின் கதைகளைப் படித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் பஜனைகள் செய்தும் ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களை வாசித்தும் நற்பொழுது போக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில் பகவானுக்கு துளசிமாலையைச் சாற்றி நறுமணமுள்ள தீர்த்தங்களை வைத்து நிவேதனங்களைப் படைத்து துவாதசி பாரணையை முடிக்க வேண்டும்.

சோமவார பிரதோஷம்
17.4.2023 திங்கள்

இன்றைக்கு வரும் பிரதோஷத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சோபகிருது வருடத்தின் முதல் பிரதோஷம் இது முதல் மாதமாக சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த பிரதோஷம் சகல செல்வங்களையும் தருகின்ற மகாலட்சுமியின் பூர நட்சத்திரத்தில் திங்கட்கிழமை வருகின்றது. சந்திரனும் மகாலட்சுமியும் இந்த பிரதோஷ நாளில் இணைகின்றார்கள். இருவரும் பாற்கடலில் இருந்து தோன்றியவர்கள் என்பது கூடுதல் விசேஷம். அந்த பாற்கடல் கடைந்த நாளும் இந்த நாள்தான். அப்பொழுது அதில் வந்த விஷத்தைத் தான் உண்டு, நீலகண்டனாகி, நல்லவற்றை மற்றவர்களுக்குத் தந்தார் சிவபெருமான்.

நம்மிடம் உள்ள குற்றங்களை எல்லாம் விலக்கிவிட்டு நமக்கு நல்லருள் தருவார் என்பதன் குறியீடாகத்தான் இந்த சோம பிரதோஷத்தைப் பார்க்க வேண்டும். சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டுவகை விரதங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த விரதம் சோமவார பிரதோஷ விரதம். இதன் பலன்கள் மிக விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் இந்த விரதத்தால் போய்விடும். ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்தின் பலனை ஒரு சோம பிரதோஷ விரதம் தரும் என்கின்ற நம்பிக்கை உண்டு. இன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

பிடி அரிசி, வன்னி இலை, அருறுகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சமர்ப்பித்து விட்டு, விளக்கேற்றி, நந்தியையும் சிவனையும் தொழ வேண்டும். இதனால் சனி பகவானால் ஏற்படுகின்ற சகல துன்பங்களும் விலகும். குறிப்பாக அஷ்டமச்சனி, ஏழரைச் சனி முதலிய நிலையில் உள்ளவர்கள் அவசியம் இதனைச் செய்ய வேண்டும்.

மச்ச அவதார ஜெயந்தி

18.4.2023 செவ்வாய்

இன்று இரண்டு விசேஷங்கள். ஒன்று மாத சிவராத்திரி தினம் என்பதால் இன்றைய நாள் இரவில் சிவபெருமானை எண்ணி உபவாசம் இருந்து, அடுத்த நாள் பாரணை செய்ய வேண்டும்.
வைணவர்களுக்கு ஏகாதசி விரதம் எப்படியோ அப்படி சிவநேயச் செல்வர்களுக்கு பிரதோஷ வழி பாடும் சிவராத்திரி விரதமும் முக்கியமானதாகும். மாதாமாதம் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிகப்பெரிய நன்மையையும் மனவலிமையையும் பெறுகின்றார்கள். இன்று மச்ச அவதார ஜெயந்தி நாளும் கூட. சிலர் 17.4.2023 அன்றுகூட அனு சரிக்கிறார்கள். நேயர்கள் உள்ளூர் கோயிலை விசாரிக்க வேண்டும்.

பகவான் இந்த உலகத்தை காப்பதற்காக பல்வேறு அவதாரங்களை எடுத்தான். 36 அவதாரங்களைச் சொல்லுகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் அம்சாவதாரமாக ஏராளமான அவதாரங்களை பகவான் நமக்காக எடுத்திருக்கின்றான். அதில் தசாவதார வைபவம் சிறப்பாகப் பேசப்படுகின்றது. அதன் முதல் அவதாரம் மச்ச அவதாரம். சோமுகாசூரன் என்ற அசுரனிடமிருந்து வேதங்களை மீட்க பகவான் மீன்வடிவத்தில் அவதரித்தார். ஜல மச்ச சம்பந்தம் என்பார்கள். மீனுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் சுத்தமாக இருப்பதற்கு மீன் அவசியம். பிரபஞ்சத்தில் ஏதேனும் இடத்தில் உயிரினம் இருக் கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், முதல் ஆய்வு அந்த இடத்திலே நீர் படிமங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்வது தான்.

நீர் படிமங்கள் இருந்தால் அங்கே நிச்சயம் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் முடிவு. உலகத்து உயிர்களை படைப்பதற்கு இறைவன் முதலில் நீரைத்தான் படைத்தான். நம்முடைய வழிபாடுகள் பலவற்றிலும் நீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் நன்றாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால் நீர் அவசியம். இந்த உலகமும் நீரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால் மீன் அவசியம். எனவே இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக மற்ற அவதாரத்தை பகவான் எடுத்தார். அப்படி எடுத்த தினம் இன்றைய தினம்.

சர்வ அமாவாசை
19.4.2023 புதன்

சோபகிருது ஆண்டின் முதல் அமாவாசை இந்த அமாவாசை என்பதாலும் சூரியன் உச்ச ராசியான மேஷராசியில் குருவோடு இணைந்து (கிட்டத்தட்ட) இருக்கக்கூடிய நிலையில் வருகின்ற அமாவாசை தினம் என்பதாலும், நீத்தார் கடன்களை முறையாக நிறைவேற்றுவது முக்கியம். தில (எள்) தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டும். என்னதான் அன்னதானம் போன்ற மற்ற விஷயங்களைச் செய்தாலும் எள்ளும் நீரும் முன்னோர்கள் சடங்கில் மிக முக்கிய பங்கினை வகிப்பது என்பதால், இன்று எள்ளும் நீரும் முறையாக தர்ப்பணம் செய்து நீத்தார் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாக நாம் முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம். தெய்வத்தின் ஆசி பலிக்க வேண்டும் என்று சொன்னால் முன்னோர்களுடைய ஆசி மிக முக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை
21.4.2023 வெள்ளி

  1. வைசாக ஸ்நானம் இன்று பல விசேஷங்கள் உண்டு. அதில் முதல் சிறப்பு. வைசாக ஸ்நானம் என்று சொல்லுவார்கள். அது இன்றிலிருந்து ஆரம்பம். இன்று முதல் 30 நாட்கள் புனித நீராட மற்றும் தோஷ பரிகாரங்களை செய்து கொள்ள ஏற்ற காலமாக பெரியவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். உதாரணமாக நீங்கள் சாந்தி ஹோமங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று சொன்னால், இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் செய்வது சிறப்பானது.
  2. சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம். அம்மன் கோயில்களிலேயே மிகவும் புகழ்பெற்ற கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில். அதிலே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சித்திரைப் பூச்சொரிதல் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அம்மனே பச்சைப்பட்டினி விரதம் என்று ஒரு விரதத்தை எடுத்துக் கொள்ளும் விழா இது. மாசிமாதக்கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதக்கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருப்பது இக்கோயிலின் சிறப்பு.

இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளி கை நிவேதனம் கிடையாது. மாவு, நீர் மோர், பானகம், இளநீர் மட்டுமே நிவேதனம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உற்சவம் உண்டு. 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும் 19ஆம் தேதி புதன்கிழமை வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு நடக்கும். 21ஆம் தேதி மாலை திரு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ ஆராதனையும் நடைபெறும்.

  1. சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை.

இன்று சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை. நாயன்மார்களிலேயே யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வலிமையான ஒரு காரியத்தைச் செய்தவர் சிறுத்தொண்ட நாயனார். இவர் பல்லவ மன்னனுக்கு படைத்தளபதியாக இருந்து சாளுக்கிய மன்னர்களை வெற்றி கொண்டார். அதன் பிறகு அவர் படைத்தொழிலில் இருந்து விலகி சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் சிவனடியாராக மாறினார். பட்டினத்தார் வைராக்கிய பாடல்களைப் பாடுவதில் வல்லவர். தன்னுடைய எல்லாச் செல்வங்களையும் நொடி நேரத்தில் தூக்கி எறிந்து விட்டு, ‘‘காதற்ற ஊசியும் வாராது காண்கடை வழிக்கு’’ என்று துறவியானவர். ஆனால் அவர் என்னால் இந்த மூன்று காரியங்களை மட்டும் செய்ய முடியாது என்று ஒரு பாடலில் சொல்லுகின்றார்.

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன்
அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன்
அல்லன்; தொண்டுசெய்துநாலாறில்
கண்ணிடத்து அப்பவல்லேன்
அல்லன்; நானினிச் சென்று
ஆளாவது எப்படியோதிருக் காளத்தி
அப்பனுக்கே

அந்த மூன்று காரியங்களில் முதலாவது காரியம், ‘‘சிறுத்தொண்ட நாயனாரைப்’’ போல பெற்ற மகனையே வாளால் அரிந்து சமைத்து அதை சிவனடியாருக்கு பரிமாறும் கடுமையான மனத்தை அடைய முடியவில்லை என்றார். வன்தொண்டரான சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை (அமுது படையல் விழா) எல்லா ஊர்களிலும் மிக சிறப்பாக நடைபெறும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Babavimosani Ekadasi ,Babavimosani ,Ekatasi ,
× RELATED 7 மணிநேரம் உணவின்றி குடோனில் அடைப்பு...